பேரறிவாளனை விடுதலை செய்யும் விவகாரத்தில் மத்திய அரசு முடிவெடுக்காவிட்டால் நீதிமன்றமே முடிவெடுக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 1991ம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்டவர் பேரறிவாளன். இந்த விவகாரத்தில் அவரை விடுதலை செய்யக்கோரி பல ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் தொடர் கோரிக்கைகளை வைத்து வருகின்றன.
இந்நிலையில் 2014ல் தமிழக அரசு மற்ற 6 பேருடன் சேர்த்து பேரறிவாளனையும் விடுதலை செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டது. ஆனால் தற்போது வரை இந்த ஏழு பேர் விடுதலை குறித்த மனு ஆளுனர், குடியரசு தலைவர் யார் மூலமாக நிறைவேற்றப்படும் என பல குழப்பங்கள் உள்ளது.
இந்நிலையில் கடந்த மார்ச் 15ம் தேதி உச்சநீதிமன்றம் முதன்முறையாக பேரறிவாளனுக்கு பெயில் வழங்கியது. மேலும் பேரறிவாளனை விடுவிப்பது குறித்து மத்திய அரசு தனது முடிவினை தெரிவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைபாட்டை தெரிவிக்காமலே இருந்து வருகிறது. இதுகுறித்து இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் மத்திய அரசு தனது நிலைபாட்டை தெரிவிக்க மே 10ம் தேதி வரை உச்சநீதிமன்றம் கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் 10ம் தேதிக்குள் மத்திய அரசு முடிவெடுக்காவிட்டால் அரசியலமைப்பின்படி உச்சநீதிமன்றம் முடிவெடுக்கும் என தெரிவித்துள்ளது.