Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மரணத்தின் விளிம்பில் மேலும் ஒரு மலேசியர்; நாளை சிங்கப்பூரில் தூக்குத் தண்டனை

Advertiesment
Malaysian
, வியாழன், 28 ஏப்ரல் 2022 (13:48 IST)
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒரு மலேசிய இளைஞர் சிங்கப்பூரில் நாளை தூக்கிலிடப்பட உள்ளார். இந்தத் தகவல் அவரது குடும்பத்தாரை நிலைகுலைய வைத்துள்ளது.
 
மலேசியாவைச் சேர்ந்த, அறிவுசார் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த 34 வயதான நாகேந்திரன் தர்மலிங்கம் நேற்று தூக்கிலிடப்பட்ட நிலையில், மேலும் ஒரு மலேசியர் மரண தண்டனையை எதிர்நோக்கி இருப்பது மலேசியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மரணத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் மலேசியரான தட்சிணாமூர்த்தி காத்தையா என்ற அந்த மலேசியர் இறுதிக்கட்ட முயற்சியாக சிங்கப்பூர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதன் மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது. தட்சிணாமூர்த்தி சார்பில் வாதாட வழக்கறிஞர்கள் யாரும் இல்லை. அதனால் தமக்குத் தாமே வாதாட உள்ளார்.
 
காணொளி வசதி மூலம் நடைபெற உள்ள இந்த விசாரணையில், சிறையில் இருந்தபடியே பங்கேற்கிறார் தட்சிணாமூர்த்தி.
 
தட்சிணாமூர்த்தி தாக்கல் செய்துள்ள மற்றொரு மனு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்நிலையில், அந்த விசாரணை முடியும் முன்பு தம்மை தூக்கிலிடுவது சட்டப்படித் தவறு என்பதே அவரது வாதம்.
 
45 கிராம் எடையுள்ள டயாமார்ஃபைன் என்ற போதைப்பொருளை சிங்கப்பூருக்குள் கடத்தி வந்தார் என்று தட்சிணாமூர்த்தி மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
webdunia
கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி மலேசியா, சிங்கப்பூர் எல்லையில் உள்ள உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் தட்சிணாமூர்த்தியும் சிங்கப்பூரைச் சேர்ந்த கிறிஸ்டின் ஜெயமணி என்ற பெண்மணியும் கைது செய்யப்பட்டனர்.
 
இருவரும் 44.96 கிராம் டயாமார்ஃபைன் போதைப்பொருளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதையடுத்து, இருவரும் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டனர். விசாரணையின்போது, தமது குழந்தைகளையும் குடும்பத்தையும் ஆதரிக்க தமக்கு பணம் தேவைப்பட்டதாகவும், ஒருசிலரால் தாம் தட்சிணாமூர்த்திக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் கிறிஸ்டின் ஜெயமணி தெரிவித்தார்.
 
"தட்சிணாமூர்த்தி என்னிடம் ஒரு பையைக் கொடுப்பார். அதில் சில பாக்கெட்டுகள் இருக்கும். அவற்றைக் குறிப்பிட்ட சிலரிடம் ஒப்படைக்கச் சொல்வார். அந்த பாக்கெட்டுகள் செய்தித்தாள்களாலும் கனமான டேப்புகளாலும் சுற்றப்பட்டிருக்கும். மேலும் கனமாகவும் இருக்கும்.
webdunia
"எனவே, அவற்றில் விளையுயர்ந்த பொருட்கள் இருக்கும் எனக் கருதினேன். வேலை முடிந்ததும் அவர் எனக்கு 200 சிங்கப்பூர் டாலர்கள் (630 மலேசிய ரிங்கிட்) தருவார். தட்சிணாமூர்த்தி அளித்த பாக்கெட்டுகளில் போதைப்பொருள் இருப்பதோ, அவை எந்த ரகத்தைச் சேர்ந்தவை என்பதோ எனக்குத் தெரியாது," என்று கிறிஸ்டின் ஜெயமணி கூறியிருந்தார்.
 
இதேபோல் தட்சிணாமூர்த்தி அளித்த வாக்குமூலத்தில், தாம் போதைப் பொருள் கடத்துவது தமக்கு அறவே தெரியாது என்றும், சீன மருத்துவக்கான மருந்துகளை சிங்கப்பூருக்கு கொண்டு செல்வதாகவே தாம் கருதியதாகவும் குறிப்பிட்டார்.
 
"மலேசிய, சிங்கப்பூர் எல்லையில் அமைந்துள்ள ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. தாம் சிங்கப்பூருக்கு கொண்டு சென்ற சீன மருந்துகளை ராஜா என்பவர் தம்மிடம் ஒப்படைத்ததாக தெரிவித்தார்.
 
"ஒருமுறை ஆர்வத்தின் பெயரில், நான் கொண்டு செல்வது என்ன என்று ராஜாவிடம் கேட்டேன். அதற்கு, அபாயகரமான மருந்துகள் ஏதுமில்லை என்று அவர் கூறினார். அதன் பின்னர், உள்ளே என்ன இருக்கிறது என்பது வெளியே தெரியும்படி, என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பாக்கெட்டில் பிரவுன் (brown) நிறத்தில் ஏதோ இருப்பது தெரிந்தது. எனவே, அது சீன மருந்தாகத்தான் இருக்கும் என்று கருதினேன்.
 
"சந்தேகம் ஏதும் எழாததால், நான் மேலதிக விவரங்கள் எதையும் கேட்கவில்லை. ராஜாவுக்கும் கிறிஸ்டினுக்கும் இடையே தகவல் தொடர்பாளராகவும் நான் மாறிப்போனேன்," என்று தட்சிணாமூர்த்தி கைது செய்யப்பட்ட பின் வாக்குமூலம் அளித்திருந்தார்.
 
சிங்கப்பூர் சட்டத்தின்படி, போதைப்பொருள் கடத்தலில் தபால் சேவையைப் போல் (courier) செயல்படக்கூடியவர்களுக்கு, கடத்தலில் குறைந்தபட்ச பொறுப்பு கொண்டிருப்பவர்களுக்கு ஆயுள் தண்டனை மட்டுமே விதிக்கப்படுகிறது.
 
இல்லையெனில், போதைப்பொருள் கடத்தலுக்கு உலக அளவில் மிகக் கடுமையான தண்டனையைத் தரும் சிங்கப்பூர் சட்டங்களில் இருந்து தப்பிக்க இயலாது.
 
கடந்த 2015ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட தட்சிணாமூர்த்தியும் கிறிஸ்டினும் குற்றவாளிகள் என சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும், கிறிஸ்டின் வெறும் தபால் சேவையைப் போல் செயல்பட்டதால் மரண தண்டனையில் இருந்து தப்பித்தார்.
 
அவருக்கு பிரம்படி அல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பின்னர், தட்சிணாமூர்த்தி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் அவருக்கு பலனளிக்கவில்லை. அவர் சிங்கப்பூர் அதிபருக்கு அனுப்பிய கருணை மனுவும் தள்ளுபடியானது.
 
கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி தட்சிணாமூர்த்தி தூக்கிலிடப்பட இருந்தார். எனினும், அதை ஒத்திவைக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவின் காரணமாக தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
 
இந்நிலையில், ஏப்ரல் 29ஆம் தேதி அவர் தூக்கிலிடப்படுவதாக அவரது குடும்பத்தாருக்கு சிங்கப்பூர் அரசாங்கம் தகவல் அனுப்பியது.
 
சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் தட்சிணாமூர்த்தி தாக்கல் செய்துள்ள ஒரு மனு மீதான விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவ்வாறு இருக்கையில் அவரை எவ்வாறு தூக்கிலிட முடியும் என்றும் மலேசியாவைச் சேர்ந்த Lawyers for Liberty (LFL) என்ற அமைப்பின் ஆலோசகர் சுரேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் மே 20ஆம் தேதி, தட்சிணாமூர்த்தி மனு மீதான விசாரணை நிறைவேற உள்ளதாகவும், அவருக்கு சட்ட ரீதியிலான வாய்ப்புகள் இன்னும் இருப்பதாகவும் சுரேந்திரன் சுட்டிக்காட்டி உள்ளார்.
 
தட்சிணாமூர்த்தியால் தமக்காக வாதாட வழக்கறிஞர்கள் யாரையும் நியமிக்க முடியவில்லை. அவருக்குப் போதுமான வசதியில்லாத நிலையில், சிங்கப்பூரில் உள்ள வழக்கறிஞர்களும் அவருக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாக விரும்பவில்லை என்கிறார் லாயர்ஸ் ஃபார் லிபெர்டியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஸைட் மாலெக்.
 
"போதைப்பொருள் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்காடினால், சிங்கப்பூர் அட்டர்னி ஜெனரல், நீதிமன்றங்களால் பழிவாங்கப்படுவோம் என்று சிங்கப்பூர் வழக்கறிஞர்கள் அஞ்சுகின்றனர். இதனால்தான் தட்சிணாமூர்த்தி இன்று தமக்குத்தாமே வாதாட வேண்டிய நிலையில் உள்ளார்," என்று ஸைட் மாலெக் கூறியுள்ளார்.
 
நேற்று போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய மலேசிய இளைஞர் நாகேந்திரன் தர்மலிங்கம் காலை சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார்.
 
இவர் அறிவுசார் குறைப்பாடு உள்ள மாற்றுத்திறனாளி என்றும் இவரின் மரண தண்டைனை நிறுத்தப்பட வேண்டும் என்றும் செயற்பாட்டாளர்கள் பலர் கோரிக்கை வைத்திருந்த நிலையிலும் அவரின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Chennai IIT - புது வகை கொரோனா பாதிப்பா..??