இந்தியாவில் நடைபெறும் திரைப்பட விழாக்களிலேயே பெருமைமிகு விழாவாகக் கருதப்படும் கோவாவில் நடைபெறும் இந்தியன் பனோரமா விழாவில் இந்தாண்டு தமிழ்ப்படம் ஒன்று திரையிடப்படுகிறது.
இந்தாண்டு வெளியாகி அனைத்துத் தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்ற திரைப்படம் பரியேறும் பெருமாள். சாதிய ஒடுக்குமுறைகளைப் பற்றிப் பேசிய இந்த திரைப்படம் அதற்கான தீர்வாக வன்முறையை முன்வைக்காமல் இருதரப்பினருக்கும் இடையேயான விவாதத்தை முன்வைத்தது. அதனால்தான் ஆதிக்க சாதியினரில் சிலர் கூட இந்த படத்தை விரும்பிப் பார்த்தனர், மாரி செல்வராஜ் இயக்கிய இந்த படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் பா. ரஞ்சித் தயாரித்திருந்தார்.
தற்போது இந்த படத்திற்குப் பெருமை சேர்க்கும் விதமாக இந்தியன் பனோரமாவில் இதன் திரையிடல் நடக்க இருக்கிறது. இதனை இயக்குனர் மாரி செல்வராஜ் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வரும் டிசம்பர் மாதம் 21 ந்தேதி இரவு 8 மணிக்கு திரையிடல் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.