இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். தமிழ்நாட்டில் ரஜினிகாந்துக்கு எப்படி வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதுபோல இந்தியளவில் சல்மான் கானுக்கு ரசிகர்கள் உண்டு.
திரைக்கதை எழுத்தாளர் சலீம் கானின் மகன்களில் ஒருவராக திரைத்துறைக்குள் நுழைந்த சல்மான் கான் அடுத்தடுத்து ஹிட்ஸ்களைக் கொடுத்து முன்னணி நடிகரானார். அதே நேரத்தில் அவர் பல சர்ச்சைகளையும் சந்தித்தார். அரிய வகை மானை வேட்டையாடியது மற்றும் குடிபோதையில் காரை ஓட்டி பிளாட்பார்மில் படுத்திருந்த ஒருவரைக் கொன்றது என வழக்குகளில் சிக்கினார்.
ஆனாலும் அதனால் அவரின் திரை வாழ்க்கை பாதிப்படையவில்லை. இந்நிலையில் தற்போது சல்மான் கான் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் சவுதியில் நடந்த ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசும்போது பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானைத் தனி நாடு எனக் குறிப்பிட்டு பேசினார். அவரின் இந்த பேச்சால் தற்போது பாகிஸ்தான் அரசு சல்மான் கானை பயங்கரவாதி என அறிவித்துள்ளது.