நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்ததால் ஓடிடி நிறுவனங்களுக்கு லாபம் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான கூலி திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வணிக ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் இதுவரை ரூ.450 கோடிக்கு மேல் வசூலித்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய திருப்பூர் சுப்பிரமணியம், “கூலி திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து எதிர்மறையான கருத்துகளை பெற்றிருந்தாலும், அது படத்தின் வசூலைப் பாதிக்கவில்லை. தமிழகத்தில் அதிக லாபம் ஈட்டிய படமென்றால் அது ஜெயிலர்தான். கூலி படமும் அதற்கு இணையாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
ரஜினிகாந்த் 50 ஆண்டுகளாகத் திரையுலகில் வசூல் சக்ரவர்த்தியாக இருப்பது ஆச்சரியமான விஷயம். கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைக்காமல் இருந்திருந்தால், அதன் வசூல் மேலும் அதிகரித்திருக்கும். இருப்பினும் ஓடிடியில் வெளியாகும் போது குழந்தைகள் அதை பார்ப்பார்கள். இதன் மூலம் ஓடிடி நிறுவனங்களுக்குத்தான் லாபம்” என்று அவர் கூறியுள்ளார்.