ஒரு திரைப்படம் வெளியாகும்போது பத்திரிகையாளர்களுக்கு என பிரத்யேக காட்சி திரையிடப்படும். அந்த காட்சியின்போது பத்திரிகையாளர்களுக்கு உணவு மற்றும் அன்பளிப்பு வழங்கப்படுவது காலங்காலமாக நடந்து வரும் ஒரு நடைமுறையாக உள்ளது
இந்த நிலையில் நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் நிர்வாகிகள் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
’இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் கட்டுப்படுத்த முடியாத செலவுகள் குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் ஆலோசனை நடத்தினர். அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் இவைதான்.
1. எந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போதும் அதாவது பட பூஜை, ஆடியோ வெளியீட்டு விழா, ட்ரெய்லர் விழா, என அனைத்து விழாக்களிலும் பத்திரிக்கையாளர்களுக்கு எந்தவிதமான அன்பளிப்பும் வழங்கப்பட மாட்டாது,
2. அனைத்து சினிமா விழாக்களில் கலந்து கொள்ளும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தேநீர், ஸ்நாக்ஸ் மட்டுமே வழங்கப்படும்.
3. மேலும் விமர்சனம் என்ற பெயரில் திரைப்படங்களை, நடிகர், நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர்களை வரம்பு மீறி தரக்குறைவாக விமர்சிக்கும் எந்த ஒரு நபரையும் தமிழ் சினிமா சார்ந்த எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அழைப்பது இல்லை என்றும் அவர் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை அவர் மீது எடுக்கப்படும்
மேற்கண்ட தீர்மானங்களை அனைத்து தயாரிப்பாளர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆலோசனை குழு சார்பாகவும் தென்னிந்தியத் திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் யூனியன் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.’’
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.