ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகை நித்யா மேனன் அந்தப்படம் ஏன் தாமதமாகிறது என்ற கேள்விக்குப் பதில் அளித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றை எடுப்பதாக இது வரை மூன்று குழுவினர் அறிவித்துள்ளனர். இயக்குனர் பிரியதர்ஷினி தி அயர்ன் லேடி என்ற பெயரில் நித்யா மேனனை வைத்து ஒருப் படமும் இயக்குனர் ஏ எல் விஜய் கங்கனா ரனாவத்தை நாயகியாக வைத்து தலைவி என்ற பெயரில் ஒருப் படமும் இயக்குவதாக அறிவித்தனர்.
இதற்கிடையில் கௌதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கும் பணிகளிலும் இறங்கினார். ஆனால் இன்னும் எந்த படக்குழுவும் படப்பிடிப்பை நடத்தவில்லை. இந்நிலையில் தி அயர்ன் லேடி படம் அறிவித்து ஓராண்டுக்கு மேலாகியுள்ள நிலையில் ஏன் தாமதம் என்ற கேள்விக்கு நடிகை நித்யா மேனன் பதிலளித்துள்ளார்.
அதில் ‘படத்திற்காக நடிகர்கள், படக்குழுவினர் நிறைய முன் தயாரிப்புகளில் ஈடுபட வேண்டிய அவசியம் உள்ளது. நாங்கள் இந்த படத்தை பரபரப்புக்காக மட்டும் பயன்படுத்திக்கொள்ளாமல் நியாயம் செய்ய விரும்புகிறோம். எனவே, உடனடியாகத் படத்தைத் தொடங்கி எந்தத் சமரசத்திற்கும் உட்பட விரும்பவில்லை. படம் தற்போது ப்ரீ-புரொடக்ஷன் நிலையில் உள்ளது. மிக விரைவில் படப்பிடிப்பை தொடங்குவோம்’ எனத் தெரிவித்துள்ளார்.