நடிகை நயன்தாராவை தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் திரை உலகம் நீண்ட காலமாக லேடி சூப்பர் ஸ்டார் என்று புகழ்ந்து பேசி வருகின்றனர். ஆனால், நேற்று தனது எக்ஸ் பக்கத்தில், தனக்கு இந்த பட்டம் வேண்டாம் எனவும், நயன்தாரா என்பதே தனது மனதிற்கு மிக அருகிலுள்ள பெயர் எனவும், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில், அவர் கூறியுள்ளதாவது:
"என் வாழ்க்கை எப்போதும் ஒரு அழகான பயணமாகவே இருந்து வருகிறது. உங்கள் அனைவரின் பேரன்பும் ஆதரவும்தான் இதை இன்னும் சிறப்பாக்கி வருகிறது. என் வெற்றியின் தருணங்களில் மகிழ்ந்து கொண்டாடிய நீங்கள், சிக்கலான நேரங்களில் எனக்குத் துணையாக இருந்தீர்கள்.
நீங்கள் பலரும் என்னை அன்புடன் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் ஆதரவு இந்த பெயரை உருவாக்கியதற்கு நன்றி. ஆனால் இனிமேல் தயவுசெய்து என்னை நயன்தாரா என்று அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஏனெனில், என் பெயர்தான் எனக்கு மிகுந்த தொடர்புடைய ஒன்று. அது ஒரு நடிகையாக மட்டுமின்றி, ஒரு தனிப்பட்ட நபராகவும் என்னை பிரதிபலிக்கிறது. பட்டங்களும் விருதுகளும் மதிப்புமிக்கவைதான், ஆனால் சில நேரங்களில் அவை நம்மை நம்முடைய பணியிலிருந்தும், தொழிலிலிருந்தும், உங்கள் அன்பான உறவிலிருந்தும் தூரமாக்கக்கூடும்."
இவ்வாறு நயன்தாரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.