கடந்த பிப்ரவரி மாதம் வெளியான மலையாள திரைப்படமான மஞ்சும்மள் பாய்ஸ் திரைப்படம் கேரளா தாண்டியும் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கேரளாவின் மஞ்சும்மள் பகுதியில் வசிக்கும் ஒரு நண்பர் குழு கொடைக்கானலில் உள்ள டெவில்ஸ் கிச்சன் எனப்படும் குணா குகைக்குள் சென்று மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லி இருந்தனர்.
இந்த படம் தென்னிந்தியா முழுவதும் மிகச்சிறப்பான வெற்றியைப் பெற்று இதுவரையிலான மலையாள சினிமாவில் அதிகம் வசூல் செய்யப்பட்ட திரைப்படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. இதையடுத்து இந்த படத்தின் இயக்குனர் சிதம்பரம் கவனிக்கப்படும் இயக்குனராக உருவானார். அவரின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது.
இந்நிலையில் அவர் இயக்கும் அடுத்த படம் சம்மந்தமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர் அடுத்து இயக்கும் படத்துக்கு ஆவேஷம் படத்தின் இயக்குனர் ஜித்து மாதவன் திரைக்கதை எழுதுகிறாராம். விஜய்யின் தளபதி 69 படத்தைத் தயாரித்து வரும் KVN புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தைத் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.