கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாள திரைப்படமான மஞ்சும்மள் பாய்ஸ் திரைப்படம் கேரளா தாண்டியும் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கேரளாவின் மஞ்சும்மள் பகுதியில் வசிக்கும் ஒரு நண்பர் குழு கொடைக்கானலில் உள்ள டெவில்ஸ் கிச்சன் எனப்படும் குணா குகைக்குள் சென்று மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லி இருந்தனர்.
இந்த படம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சக்கை போடு போட்டு 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. அதிக வசூல் செய்த மலையாளப் படம் என்ற சாதனையை மஞ்ஞும்மள் பாய்ஸ் நிகழ்த்தியுள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு படத்தில் ஒரு முக்கியமான இடத்தில் இளையராஜாவின் கண்மணி அன்போடு காதலன் எழுதும் கடிதம் பாடலை பயன்படுத்தியது காரணமாக அமைந்தது.
இந்நிலையில் கடந்த மே மாதம் படக்குழுவினருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது சர்ச்சையைக் கிளப்பியது. தன்னுடைய பாடலை அனுமதியின்றி படக்குழு பயன்படுத்தியுள்ளதாகவும், அதை உடனடியாக நீக்கவேண்டும் மற்றும் பாடலை பயன்படுத்தியதற்கான இழப்பீடை வழங்கவேண்டும் என அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இப்போது இந்த விவகாரத்தில் மஞ்சும்மள் பாய்ஸ் படக்குழு இளையராஜாவுக்கு 60 லட்ச ரூபாய் இழப்பீடு கொடுக்க சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவல் உண்மையில்லை என மஞ்சும்மள் பாய்ஸ் தயாரிப்பு நிறுவனம் பதிலளித்துள்ளது.