பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் மற்றும் வாழை ஆகிய படங்களை அடுத்து மாரி செல்வராஜின் ஐந்தாவது படமாக பைசன்நேற்று ரிலீஸானது. இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளனர்.
இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி ரிலீஸாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. ஐந்து நாட்களில் உலகளவில் சுமார் 35 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக ஓடிவரும் பைசன் படத்துக்கு வெவ்வேறு தளங்களில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் படத்தைப் பார்த்து இயக்குனர் மாரி செல்வராஜைப் பாராட்டியுள்ளார். இது சம்மந்தமாக மணிரத்னம் பகிர்ந்த செய்தியை தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மாரி செல்வராஜ். அதில் “மாரி, இப்போதுதான் பைசன் படம் பார்த்தேன். நீதான் பைசன். பெருமையாக உள்ளது. தொடர்ந்து செல். இந்த குரல் மிகவும் முக்கியமானது” எனப் பாராட்டியுள்ளார்.