Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்!... பைசன் படத்தைப் பாராட்டிய முதல்வர்!

Advertiesment
மாரி செல்வராஜ்

vinoth

, ஞாயிறு, 26 அக்டோபர் 2025 (09:02 IST)
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் மற்றும் வாழை ஆகிய படங்களை அடுத்து மாரி செல்வராஜின் ஐந்தாவது படமாக ‘பைசன்’நேற்று ரிலீஸானது. இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி ரிலீஸாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. ஐந்து நாட்களில் உலகளவில் சுமார் 35 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக ஓடிவரும் பைசன் படத்துக்கு வெவ்வேறு தளங்களில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் படத்தைப் பார்த்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார். இது சம்மந்தமான அவரது முகநூல் பதிவில் “தன் திறமையை மட்டுமே நம்பி, கிராமத்தில் இருந்து சாதிக்கக் கிளம்பிய ஓர் இளைஞன், கபடிக் கோட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் சந்திக்கும் போராட்டங்களை எதிர்கொண்டு வெற்றி பெற்ற கதையை மிகச் சிறப்பான திரை அனுபவமாக மாற்றியுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

அவரது ஒவ்வொரு படத்தையும் நான் உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். ஒவ்வொன்றும் ஒரு 'sharp message'-ஐயும் தாக்கத்தையும் நம் மனங்களில் பதிக்கத் தவறியதே இல்லை. அவ்வகையில் விளையாட்டுத் துறையை மையமாக வைத்து, இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டிய பாதையை, அரசியலை மிக முதிர்ச்சியுடன் காட்டியிருக்கிறார் மாரி செல்வராஜ் அவர்கள்.

சகோதரர் மாரியின் திரைமொழியும், கலைநேர்த்தியும், மேலும் மேலும் மேம்பட்டு வருவதற்கு எடுத்துக்காட்டாக 'பைசன்' மிளிர்கிறது. இத்திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, மாரியின் திரைக்கதைக்கு உயிரூட்டியுள்ள துருவ் விக்ரம், பசுபதி, அனுபமா, ரஜிஷா உள்ளிட்ட நடிகர்கள், பின்னணியில் உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்!

இதுபோல மேலும் பல படைப்புகளைத் தமிழ்த் திரையுலகுக்கு வழங்க மாரி செல்வராஜ் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்!” எனப் பாராட்டியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் சினிமா வாழ்க்கையில் மிகவும் சோகமாக இருந்தது அப்போதுதான்… செல்வராகவன் வருத்தம்!