பிரபுதேவா, காயத்ரி ஜெயராம், வடிவேலு, விவேக் உள்ளிட்டவர்கள் நடிப்பில் நாராயண மூர்த்தி இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மனதை திருடிவிட்டாய் திரைப்படம். இந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் இன்றளவும் இந்த படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் ரசிக்கப்பட்டு வருகின்றன. வடிவேலுவும் விவேக்கும் இணைந்து நடித்த கடைசி திரைப்படம் இதுதான்.
இந்த படத்துக்குப் பிறகு ஒரு பொண்ணு ஒரு பையன் படத்தை இயக்கினார் நாராயண மூர்த்தி. அதன் பின்னர் சன் தொலைக்காட்சியில் சீரியல்களை இயக்க ஆரம்பித்தார். இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த சிகிச்சைப் பலனின்றி நேற்று காலமானார். அவருக்கு வயது 59.
அவரது உடல் சென்னையை அடுத்த பம்மலில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மகன் லண்டனில் இருந்து வந்ததும் உடல் தகனம் செய்யப்படவுள்ளது. அவருக்கு அம்சவேணி என்ற மனைவியும் லோகேஷ்வரன் என்ற மகனும் உள்ளனர்.