மணிரத்னம் இயக்கத்தில் உருவான அலைபாயுதே திரைப்படம் மூலமாக சினிமாவில் நடிகராக அறிமுகமானார் மாதவன். அந்த படத்தின் வெற்றியின் மூலம் முன்னணி நடிகரான மாதவன் தொடர்ந்து தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார். சமீபத்தில் அவர் இயக்கிய ராக்கெட்ரி திரைப்படம் தேசிய விருது பெற்றது. அதையடுத்து ஜி டி நாயுடுவின் பயோபிக் படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் இப்போது மாதவன் மத்திய அரசால் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபகாலமாக மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியோடு மாதவன் நெருக்கமாக இருந்து வரும் நிலையில் இந்த பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் தன்னுடைய தோற்றம் குறித்து பேசியுள்ளார். அதில் “நான் ரஜினி மற்றும் அஜித் ஆகியோரின் திரைக்கு வெளியிலான தோற்றத்தைப் பார்த்த பின்னர் நானும் எனது திரைக்கு வெளியிலான தோற்றத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அவர்கள் திரையில் தங்களது தோற்றத்தால் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்துகிறார்கள்” எனக் கூறியுள்ளார்.