தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவி ஏற்றது முதலே அவருக்கும் ஆளும் கட்சிக்கும் இடையே உரசல்கள் நடந்தேறி வருகின்றன. இந்நிலையில் கடந்த ஜூலை 13ம் தேதியன்று ஆளுநர் மாளிகை சார்பில் மருத்துவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் வழங்கப்பட்ட விருது கேடயத்தின் கீழ் திருக்குறள் ஒன்று இடம்பெற்றிருந்தது.
அது திருக்குறளின் வரிசை எண் 944ல் அமைந்துள்ள திருக்குறள் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த எண்ணில் அப்படி ஒரு திருக்குறளே இல்லை என்பது தமிழ் ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து தேடியதில் அந்த திருக்குறள், 1330 குறள்களில் எங்கேயுமே இல்லை என்று தமிழ் ஆர்வலர்கள் கூறியுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த விருது திருப்பிப் பெற்றுக்கொள்ள பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இதுகுறித்து பாடலாசிரியர் வைரமுத்து தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். அவரது பதிவில்
“ஜூலை 13இல்
வள்ளுவர் மறை
வைரமுத்து உரை நூலை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வெளியிட்ட அதே நாளில்
ஆளுநர் மாளிகையில்
ஒரு விழா
நடந்ததாய்க் கேள்விப்பட்டேன்
மருத்துவர்களுக்கு
வழங்கப்பட்ட
நினைவுப் பரிசில்
944ஆம் திருக்குறள் என்று
அச்சடிக்கப்பட்ட வாசகத்தில்
இல்லாத குறளை
யாரோ எழுதியிருக்கிறார்கள்
அப்படி ஒரு குறளே இல்லை;
எண்ணும் தவறு
யாரோ ஒரு
கற்பனைத் திருவள்ளுவர்
விற்பனைக் குறளை
எழுதியிருக்கிறார்
இது எங்ஙனம் நிகழ்ந்தது?
ராஜ்பவனில்
ஒரு திருவள்ளுவர்
தங்கியுள்ளார் போலும்
அந்தப்
போலித் திருவள்ளுவருக்கு
வேண்டுமானால்
காவியடித்துக்கொள்ளுங்கள்
எங்கள்
திருவள்ளுவரை விட்டுவிடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.