தமிழ் சினிமாவில் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் அடைந்த உயரம் அளப்பரியது. தனது இயக்குநர் பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கினார். அதன் பின்வரும் "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். கடைசியாக அவர் இயக்கிய கூலி திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் கடுமையான எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில் அவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படம் ஒரு பீரியட் கேங்ஸ்டர் கதையாக உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையோடு தொடங்கியது. படத்துக்கு DC (தேவதாஸ்-சந்திரா) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியானது.
இந்த படத்தை முடித்துவிட்டு லோகேஷ் அடுத்து கைதி 2 படத்தைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அவர் வேறொரு படத்துக்கான வேலைகளைத் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்றுக்காக பிரபல தெலுங்கு ஹீரோ ஒருவரைக் கதாநாயகனாக வைத்து பிரம்மாண்டமான ஆக்ஷன் படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இது அவரின் கனவுப் படமாக சொல்லபப்டும் “இரும்புக் கை மாயாவி” கதைதான் எனவும் சொல்லப்படுகிறது.