லியோ படத்தின் முக்கியக் காட்சிகளைக் காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் படமாக்கினார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதையடுத்து சென்னையில் அடுத்த கட்ட ஷுட்டிங் தொடங்கி நடந்து வருகிறது. ஜூன் மாத இறுதியில் மொத்த ஷூட்டிங்கும் முடியும் என தெரிகிறது. அக்டோபர் 19 ஆம் தேதி படம் ரிலீஸாகிறது.
லியோ படத்தின் ஷூட்டிங்கே இன்னும் முடியாத நிலையில் படத்தின் வியாபாரம் ஜரூராக நடந்து வருகிறது. ரிலீஸுக்கு முன்பே இந்த படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது ரஜினியின் 2.0 படத்தை விட அதிகம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைவிட அதிகமாக ஆர் ஆர் ஆர் திரைப்படமும், சலார் திரைப்படமும் மட்டுமே ரிலீஸுக்கு முன்பு அதிக தொகை வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் லோகேஷ் ஆகிய இருவரும் மாஸ்டர் படத்துக்குப் பிறகு லியோ படத்தில் இணைந்துள்ளனர். லோகேஷ் கடைசியாக இயக்கிய விக்ரம் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி என்பதால் இந்த படத்தின் மீது எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.