வாரிசு படத்துக்குப் பிறகு விஜய் அடுத்து நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீருக்கு சில நாட்களுக்கு முன்னர் பயணம் செய்தது. இந்நிலையில் இப்போது திட்டமிட்ட காட்சிகளை எடுத்து முடிப்பதற்கு மோசமான வானிலை காரணமாக மிகுந்த சிரமத்தை சந்திப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் படக்குழு அங்கேயே தங்கி இப்போது ஷூட்டிங்கை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது விஜய் மற்றும் கௌதம் மேனன் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் லோகேஷ்.
லியோ படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் அங்கு ஏற்கனவே மிஷ்கின், அர்ஜுன் மற்றும் கௌதம் மேனன் ஆகியோரின் காட்சிகளை படக்குழு படமாக்கி முடித்துள்ள நிலையில், இப்போது சஞ்சய் தத் படத்தில் இணைந்துள்ளார். அங்கு இப்போது விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகளை படக்குழு படமாக்கி வருவதாக சொல்லப்படும் நிலையில், மார்ச் 24 ஆம் தேதியோடு காஷ்மீர் ஷூட் முடிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் பின்னர் சென்னையில் மீதமுள்ள காட்சிகள் படமாக்கப்படும் என சொல்லப்படுகிறது.