தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்கோடிக்காவல் திருத்தலம், கடுமையான கிரக தோஷங்களை போக்கி சிவகதி அளிக்கவல்ல சிறப்புடையது. பன்னிரண்டு மாதங்களில் சூரியனுக்குரிய கார்த்திகை மாதத்தில் இங்கு வழிபடுவதன் மூலம் சூரிய தோஷங்கள் நீங்கிப் புண்ணியம் கிடைக்கும்.
இத்தலத்தில் காவிரி நதியானது தனது இயல்பான திசையிலிருந்து விலகி வடக்கு முகமாக பாய்கிறது. இந்த காவிரியில் நீராடுவது கங்கையில் நீராடிய புண்ணியத்தை தரும் என்று நம்பப்படுகிறது.
இத்தலத்தின் தீர்த்தம் சிருங்கோத்பவ தீர்த்தம் ஆகும். நந்தி பகவான் தனது கொம்பினால் பூமியை கீறியதால் பாதாளத்திலிருந்து கங்கையே பீறிட்டு கிளம்பியதால் இந்தப் பெயர் வந்தது.
இங்குள்ள இறைவன் கோடீஸ்வரர்; இறைவி திரிபுரசுந்தரி. இத்தலத்தில் நீராடி மூலவரை வழிபட பிரம்மஹத்தி தோஷம் கூட நீங்கிவிடும் என்று தல புராணம் கூறுகிறது.