பிரபல திரையிசை பாடகர் கே.கே உயிரிழந்த நிலையில் லெஜெண்ட் பட இயக்குனர்கள் பகிர்ந்துள்ள வீடியோ வைரலாகியுள்ளது.
இந்திய சினிமாவில் பிரபலமான திரையிசை பாடகராக இருந்து வந்தவர் கே.கே என்னும் கிருஷ்ணகுமார் குன்னத். கேரளாவை பூர்வீகமாக கொண்ட கே.கே சிறுவயதிலேயே பெற்றோருடன் மேற்கு வங்கத்தில் குடியேறினார்.
பல ஆயிரம் விளம்பரங்களுக்கு பாடல்கள் பாடிய கே.கே, பின்னர் திரை பாடல்களிலும் தனது முத்திரையை பதித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடா, இந்தி, மராத்தி, குஜராத்தி, மலையாளம் என பல இந்திய மொழிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கே.கே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி உள்பட்ட அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் நடித்து லெஜெண்ட் படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது. அந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள நிலையில் அதில் இடம்பெறும் “கொஞ்சி கொஞ்சி” என்ற பாடலை கே.கே, ஷ்ரேயா கோஷல் பாடியிருந்தனர்.
தற்போது மும்பையில் பாடல் ஒலிப்பதிவின்போது கே.கே பாடிய வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ள லெஜெண்ட் படத்தின் இயக்குனர்கள் ஜேடி – ஜெர்ரி “kk எனும் மாயக்குரலோனின் மறைவு இசை உலகத்தில் ஒரு பேரிழப்பு. அவரோடு எங்கள் தி லெஜண்ட் படத்திற்கு சமீபத்தில்தான் கொஞ்சி கொஞ்சி பாடலை மும்பாயில் ஒலிப்பதிவு செய்தோம்.
என்ன ஒரு உற்சாகம், ஆர்வம், commitment .. எத்தனை முறை பாடினாலும் energy குறையாத குரல்.. பழகுவதற்கு இனிமை ,பாடலில் தனித்துவம். சந்தித்த சில மணிநேரத்திலேயே ரொம்ப நாள் பழகிய உணர்வைத் தர ஒரு சிலரால்தான் முடியும்.
எங்களுக்குப் பாட வந்திருந்தாலும் எங்களை ஒரு guest போல கவனித்தது ரொம்ப அபூர்வமான குணம் காலத்திற்கும் காதில் வாசம் செய்யும் பாடலை பாடிய அந்த கலைஞன் இப்போது இல்லை என்பதை நம்ப மறுக்கிறது மனம். வாழ்வின் நிலையாமைச் சொல்லி செல்லும் நாட்கள் எங்களது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.