தமிழ் சினிமாவில் 80 களின் இறுதியில் அறிமுகம் ஆகி 90 களிலும் 2000 களின் தொடக்கத்திலும் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தவர் தேவா. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் தமிழ் சினிமா சந்தையில் இருந்து வெளியேறினார். இப்போது பல ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அவர் கச்சேரிகள் மூலமாகக் கம்பேக் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் பேசும்போது தெரிவித்த கருத்து கவனம் பெற்றுள்ளது. அதில் “எனக்கு காப்பிரைட் பணமெல்லாம் வேண்டாம். நான் காப்பி ரைட் கேட்காததால்தான் என் பாடல்களை எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். அது இளைஞர்களிடம் சென்று சேர்கிறது. கரு கரு கருப்பாயி பாடல் எல்லாம் இப்போது இளைஞர்கள் முதல் குழந்தைகள் வரை கேட்டு, நான்தான் அதன் இசையமைப்பாளர் என்பது தெரிகிறது. அதனால் எனக்கு இந்த புகழே போதும். குழந்தைகள் என் பாடலை ரசிப்பதைப் பார்ப்பது எனக்கு பணத்தை விடப் பெரியது” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் தேவாவின் இந்த கருத்தை வைத்துப் பலரும் இளையராஜாவை விமர்சித்து வருகின்றனர். அது குறித்து ஜேம்ஸ் வசந்தன் தன்னுடைய முகநூலில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில் “"என் பாடல்களுக்கு நான் Copyright கேட்கமாட்டேன்" என இசையமைப்பாளர் தேவா அண்மையில் சொன்னதாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் வலம்வருகிறது. அப்படி அவர் சொல்லியிருந்தால் அது அவரது அறியாமை அல்லது உண்மையற்ற கூற்று.
ஏனெனில் இந்தியாவிலுள்ள எல்லா இசையமைப்பாளர்களைப் போலவே (இளையராஜா தவிர) அவரும் ஒரு IPRS உறுப்பினர்தான். நீங்களே அந்த இணையதளத்தில் போய் பார்த்துக்கொள்ளலாம். இது ஒன்றும் ரகசியமெல்லாம் அல்ல. யார் வேண்டுமானாலும் யாரெல்லாம் அதில் உள்ளனர் என்பதைக் காண இயலும். உறுப்பினர் பெயர்கள் எல்லாமே அதில் உள்ளன.
DEVA - COMPOSER - 00254161291
நாம் இதில் உறுப்பினராக இணைந்துவிட்டால், நம் பாடல் ஒன்று வெளியாகி விட்டால், அதை ரசிகர்கள் கேட்கக் கேட்க அதற்கான ஆதாய உரிமைத்தொகை நம் கணக்கில் சேர்ந்துகொண்டே இருக்கும். ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாளில் நம் கணக்கிலிருக்கும் தொகையை நமக்கு அனுப்பிவிடுவார்கள்.
இப்படி அவருக்கும் எல்லாருக்கும் இது வந்துகொண்டேதானிருக்கும். வந்துகொண்டுதானிருக்கிறது.
இதன் பின்னணி தெரியாத பலர் அவரைப் பாரட்டியும் இளையராஜாவை இகழ்ந்தும் பேசிவருதால் இதனை எல்லோரும் அறிந்துகொள்வது நலம் என்று இந்த விளக்கம்.” எனக் கூறியுள்ளார்.