துல்கர் சல்மான் , பாக்யஸ்ரீ போர்ஸ் சமுத்திரக்கனி மற்றும் ராணா ஆகியோர் நடிப்பில் செல்வமணி செல்வராஜ் எழுதி இயக்கியுள்ள படம் காந்தா. ஜானு சந்தர் இசையமைத்துள்ளார். இந்த வாரம் வெள்ளிக் கிழமை இந்த படம் ரிலீஸாகவுள்ளது.
முழுக்க முழுக்க 1950களில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ள இந்த கதையில் துல்கர் சல்மான், நடிப்பு சக்ரவர்த்தி டி கே மகாதேவன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு பெரிய ஸ்டார் நடிகருக்கும், அவரை வளர்த்துவிட்ட இயக்குனருக்கும் இடையே நடக்கும் மோதலாக உருவாகியுள்ளது இந்த படம்.
முழுவதும் 1950, 60களை நினைவூட்டும் விதமான அரங்க அமைப்புகள், கார்கள், சினிமா படப்பிடிப்பு தளம் என கண்முன்னே ஒரு பெரிய நாஸ்டால்ஜியாவை கொண்டு வந்து நிறுத்துகிறது படத்தின் ட்ரெய்லர். அனைவரது நடிப்பும் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இந்த கதை தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகரான தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில் தியாகராஜ பாகவதரின் மகள் வழிப் பேரன் இந்த படம் சம்மந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதன்படி தங்களிடம் முறைப்படி அனுமதி வாங்காமல் இந்த கதையைப் படமாக்கி உள்ளதாகவும் அதனால் படத்தின் ரிலீஸுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் மனுத்தாக்கல் செய்துள்ளார். இது சம்மந்தமாக காந்தா படத்தின் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.