இயக்குநர் மோகன். ஜி இயக்கும் 'திரௌபதி - 2' திரைப்படத்தின் 'எம்கோனே' பாடலை பின்னணி பாடகி சின்மயி பாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக விமர்சகரான சின்மயி, சாதி சார்ந்த திரைப்படங்களை எடுக்கும் மோகன். ஜி-யின் படத்தில் பாடியது ஏன் என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இதற்கு பதிலளித்த சின்மயி, "இந்த பாடலை சுற்றியுள்ள விஷயங்கள் முன்பே தெரிந்திருந்தால், என் கொள்கைகளுக்கு முரண்பட்டவை என்பதால் நான் ஒருபோதும் இதில் இணைந்திருக்க மாட்டேன்" என்று வருத்தம் தெரிவித்தார்.
சின்மயியின் மன்னிப்பை கண்டித்து மோகன். ஜி காட்டமான பதிவை வெளியிட்டார். "என் திரைப்படத்தில் ஒரு கருத்து பதிவானால், நீங்கள் என்னை குறி வைக்கலாம். அதைவிடுத்து, என் திரைப்படங்களில் பணியாற்றும் கலைஞர்களைத் தாக்குவது என்பது கோழைத்தனமானது" என்று அவர் ஆவேசமாகக் கூறினார்.
கலைஞர்களிடம் எந்த வேறுபாடும் பார்ப்பதில்லை என்றும், தனது நாட்டையும் கலாச்சாரத்தையுமே படங்களில் கூறுவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.