நடிகர் விக்ரம்மின் மகனான துருவ் விக்ரம் அர்ஜுன் ரெட்டியின் ரீமேக் படமான ஆதித்யா வர்மா படம் மூலமாக் அறிமுகமானார். அதன் பின்னர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான மகான் திரைப்படத்தில் நடித்தார். அதையடுத்து மூன்றாவது படமாக மாரி செல்வராஜ் இயக்கும் பைசன் படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன், பசுபது, ரஜிஷா விஜயன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளது. படத்தில் இருந்து வெளியானப் பாடல்கள் இணையத்தில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.
சமீபத்தில் இந்த படம் குறித்துப் பேசிய துருவ் விக்ரம் “பைசன் திரைப்படம்தான் என்னுடைய முதல் படம்” என்று பேசியிருந்தார். அதற்கானக் காரணத்தை இப்போது அவர் தெரிவித்துள்ளார். அதில் “என்னுடைய முதல் படமான ஆதித்யா வர்மா ஒரு ரீமேக் படம். அதனால் அதை நான் முதல் படமாகக் கருதவில்லை. அதே போல மகான் படமும் என் அப்பாவின் படம்தான். அதில் நான் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தேன். அதனால் அதையும் நான் என் இரண்டாவது படமாகக் கருதவில்லை. அதனால் பைசன் படம்தான் என் முதல் படம்” என விளக்கமளித்துள்ளார்.