பிக் பாஸ் இயக்குநர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!
பிக் பாஸ் இயக்குநர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!
நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் தொலைகாட்சி தமிழில் ஒளிபரப்பி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நாதஸ்வரத்தை அவமதித்ததாக கூறி தொடர்ப்பட்ட வழக்கில் அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி 100-வது நாளை நோக்கி இறுதிக்கட்டத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த தொடக்கத்தில் இதற்கு பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் சேரி பிஹேவியர் என திட்டிய சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை நிறுத்த பல கோரிக்கைகள் எழுந்தன. மேலும் இந்த நிகழ்ச்சி தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரானது என அமைப்புகள் சில போர்க்கொடி தூக்கின. ஆனாலும் நிகழ்ச்சி சுமுகமாக எந்த தடையும் இல்லாமல் நடந்து வருகிறது.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாதஸ்வரத்தை தூக்கியெறிந்து அவமதித்ததாக கூறி, தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் பேரவைத்தலைவர் குகேஷ், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிக் பாஸ் நிகழ்ச்சியின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோரை அக்டோபர் 6-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.