விஜய் நடித்து வெளிவரவுள்ள மெர்சல் படத்தின் தலைப்பு மாற்றப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.
அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இப்படம் வருகிற தீபாவளியன்று வெளியாகவுள்ளது.
அந்நிலையில், தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு வழக்கை தொடர்ந்தார். 2014ம் ஆண்டு ‘ மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பை பதிவு செய்திருந்தேன். ஆனால், மெர்சல் என விஜய் படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர். எனவே, அந்த தலைப்பில் விளம்பரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அவரின் மனுவை விசாரித்த நீதிபதி ‘மெர்சல்’ என்ற தலைப்பை வருகிற அக்டோபர் 3ம் தேதி வரை விளம்பரத்திற்காக பயன்படுத்தக்கூடாது என தடை விதித்தார். மேலும், தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், மெர்சல் தலைப்பிற்கு நீதிமன்றம் தடை விதித்தால், ‘ஆளப்போறான் தமிழன்’ என்கிற பாடல் வரியையே தலைப்பாக வைத்துவிடலாம் எனப் படக்குழு ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது.