தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் சினிமா தயாரிப்பாளர் ஜே எஸ் கே சதீஷ்குமார் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரண்டு கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் பாதிப்புகள் குறையாமல் இருப்பதால் மேலும் இரண்டு வாரங்கள் மத்திய அரசு மூன்றாம் கட்ட ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தும் பொருட்டு டாஸ்மாக் கடைகளை திறந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு நாளை தமிழகத்தில் சென்னையைத் தவிர அனைத்து இடங்களிலும் திறக்கப்பட உள்ளது.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சினிமா தயாரிப்பாளர் ஜே எஸ் கே சதீஷ்குமார் ‘ஊரடங்கின் காரணமாக மூடிவைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபானக் கடையை மீண்டும் மே 7ஆம் தேதி முதல் திறக்கப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு கள்ளச்சாராயம் பெருகி வருவது காரணமாகக் கூறப்படுகிறது. தவிர, அறியாமையில் பலர் கெமிக்கல்களை கலந்து குடிப்பது, அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்திருப்பதால் இங்கிருந்து பலர் அங்கு படையெடுப்பது போன்றவையும் நடக்கிறது. அதனால், இங்கேயே கடையைத் திறக்க அரசு முன் வந்திருக்கிறது.
இந்த இடத்தில் ஓர் இந்தியக் குடிமகனாக எனக்கிருக்கும் அடிப்படை உரிமையில் ஒரு கோரிக்கையை, ஆதங்கத்தை முன்வைக்கிறேன். அதாவது, நாடு இப்போது இருக்கும் ஆபத்தான சூழலில், வயிற்றுக்கும் உயிருக்குமான போராட்டக்களத்தில், டாஸ்மாக்குக்கு வந்து இவ்வளவு பணம் கொடுத்து மதுவை வாங்குபவர்களின் ஆதார் எண்ணை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு மது பாட்டில்களை விற்பனை செய்ய வேண்டும்.
அப்படிச் செய்வதன் மூலம், அவர்களுக்கு அரசாங்கம் அடிப்படை உதவியாகக் கொடுக்கும் 1,000 ரூபாய் உதவித் தொகை, இலவச அரிசி, மளிகைப் பொருட்கள், அம்மா உணவகத்தில் இலவச உணவு, இலவச கேஸ் மானியம் போன்றவற்றை ரத்து செய்யலாம். அவர்கள் பெயரை சலுகை தேவையற்றோர் பட்டியலில் சேர்க்கலாம். காரணம், அடிப்படை வசதிகள் தேவைப்படுவோர்கள் மத்தியில் மதுவுக்காக ஆடம்பரச் செலவு செய்யும் அளவுக்குப் பணம் இருப்பவர்களுக்கு அரசின் அத்தியாவசிய உதவிகள் தேவைப்படப் போவதில்லை.
அரசின் உதவிகள் தேவைப்படுவோருக்கு போய்ச் சேரட்டும். இன்னொரு முக்கிய விஷயத்தையும் கருத்தில்கொள்ள வேண்டும். ‘வெறும் வசதியானவர்களும், மேல் மட்டத்திலுள்ளவர்களும் மட்டும்தான் குடிக்கிறார்களா... ஏழை, எளிய மக்கள் குடிப்பதில்லையா... அவர்கள் பாதிக்கப்படுவார்களே...’ என்று கேட்கலாம். இத்தகைய நடவடிக்கைகள் எடுப்பதின் மூலம் குடிப்பவர்கள் தாமாகவே குடும்பத்தின் பொருளாதார நலனைக் கருதி குடிப்பழக்கத்தை நிறுத்தக்கூடும். அவர்கள் வாழ்வு பொலிவுமிக்கதாக மாறும். அவர்கள் குடும்பம் அன்புசூழ் இல்லமாக மாறும். மக்கள் நலன் கருதி அரசு, மேற்கண்ட கருத்தை பரிசீலிக்க வேண்டும்” என் வேண்டுகோள் விடுத்துள்ளார்.