பிரபல சமையல் கலைஞர் மற்றும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும், அவரது இரண்டாவது மனைவி ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாகவும் வெளியாகி உள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே சுருதி என்பவரைத் திருமணம் செய்தவர் என்பதும், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், கடந்த சில நாட்களாக ரங்கராஜ் மற்றும் சுருதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக பரவலாக பேசப்படுகிறது.
இந்த சூழலில், ஜாய் கிரிஸில்டா என்ற ஆடை வடிவமைப்பாளருடன் மாதம்பட்டி ரங்கராஜுக்கு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஆனால், முதல் மனைவி சுருதியை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்திருக்க முடியாது என்பதால், இந்த செய்தி வதந்தியாக கூட இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இருப்பினும், மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய்க்கு பொட்டு வைக்கும் புகைப்படம் ஒன்றும், அவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் பரவி பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன.
இந்தச் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் வகையில் மாதம்பட்டி ரங்கராஜ் விரைவில் இது குறித்து விளக்கம் அளிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.