மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் மீது நடிகர் விஷால் அளித்த லஞ்ச புகார் தொடர்பாக, 2 பெண்கள் உட்பட 3 தரகர்கள் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத சென்சார் போர்டு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
மார்க் ஆண்டனி திரைப்படத்தை இந்தியில் வெளியிடுவதற்கு சென்சார் போர்டு அதிகாரிகள் தரகர்கள் மூலமாக லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் கடந்த சில நாட்களுக்கு முன் குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தார்.
இந்த புகாரின் மீது மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு லஞ்சம் பெற்றதாக கூறப்பட மும்பை சென்சார் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இதையடுத்து விஷால் நன்றி தெரிவித்து இருந்தார்.
தனது புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதி செய்த நிலையில் மத்திய அரசுக்கு நன்றி என்று கூறிய நடிகர் விஷால் ஊழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எழுகிறது என்று கூறி இருந்தார். மேலும் ஊழலில் ஈடுபடாமல் நேர்மையாக நாட்டுக்கு சேவையாற்ற அதிகாரிகளை இது ஊக்குவிக்கும் என்றும் ஊழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் எனக்கும் மற்றவர்களுக்கும் திருப்தியான உணர்வை தருகிறது என்றும் விஷால் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் மத்திய அரசு கூறியபடியே 2 பெண்கள் உட்பட 3 தரகர்கள் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத சென்சார் போர்டு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.