அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் குட் பேட் அக்லிஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் ஜூன் 20 ஆம் தேதி மீண்டும் அஸர்பைஜானில் தொடங்கியது.
அங்கு சில ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் இப்போது அஜித் மற்றும் த்ரிஷா ஆகியோர் சென்னைக்குத் திரும்பிவிட்டனர். அங்கு இப்போது மகிழ் திருமேனி மற்ற நடிகர்களை வைத்து வேறு சில காட்சிகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் இன்னும் சில நாட்களில் அங்கிருந்து கிளம்பி ஐதராபாத்தில் செட் அமைத்து மீதமுள்ளக் காட்சிகளை படமாக்க உள்ளார்களாம்.
இந்த படம் முதலில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது லைகா நிறுவனம் தங்கள் படமான வேட்டையன் படத்தைதான் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாம். அதனால் விடாமுயற்சி திரைப்படம் டிசம்பர் 24 ஆம் தேதி கிறிஸ்துமஸை முன்னிட்டு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே அஜித்தின் குட் பேட் அக்லி அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீஸுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஒருவேளை விடாமுயற்சி டிசம்பர் 24 ல் ரிலீஸ் ஆனால் குட் பேட் அக்லி திரைப்படம் தள்ளிப் போகவாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.