தமிழ் சினிமாவில் நாயகிகளின் பிரகாச காலம் என்று பார்த்தால் 5 முதல் 10 ஆண்டுகள்தான். அதன் பிறகு அக்கா, அம்மா வேடத்தைக் கொடுத்துவிடுவார்கள். ஆனால் ஒரு சிலர்தான் இதற்கு விதிவிலக்காக இருப்பார்கள். அப்படிப்பட்ட நடிகைதான் திரிஷா.
ஜோடி என்ற படத்தின் மூலம் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக உயர்ந்து தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து இப்போதும் பரபரப்பான கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக பெரியளவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தாலும் பொன்னியின் செல்வன் வெற்றியால் மீண்டும் அவரைத் தேடி வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன.
அதையடுத்து அஜித், விஜய், சூர்யா ஆகியோருடன் மீண்டும் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று அவரது வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து போலீஸார் மோப்ப நாய் உதவியுடன் சென்று தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தை சோதனையிட்டுள்ளனர். சோதனையில் மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது. சமீபகாலமாக பிரபலங்களின் வீடுகளுக்கு இதுபோல போலியான மிரட்டல்கள் வருவது வாடிக்கையாகியுள்ளது.