இந்த ஆண்டு முழுவதும் சினிமா மற்றும் கார் பந்தயம் என இரட்டைக் குதிரைகளில் பயணித்து வருகிறார் அஜித். தன்னுடைய குட் பேட் அக்லி படம் அடைந்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அஜித்குமார் கடந்த சில மாதங்களாக கார் பந்தயங்களில் ஆர்வமாகக் கலந்துகொண்டு வருகிறார். இனிமேல் வருடத்துக்கு ஒரு படம், மீத நேரத்தில் கார் ரேஸ் பந்தயங்கள் என திட்டம் வகுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆண்டுக்கு ஒரு படம் மற்ற நாட்களில் கார் பந்தயம் என அவர் முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் அஜித்குமார் ரேஸிங் என்ற அணியை உருவாக்கியுள்ளார். அதில் சமீபத்தில் தமிழகத்தின் ரேஸர் நரேன் கார்த்திகேயனும் இணைந்தார். தொடர்ந்து துபாய், ஜெர்மனி போன்ற நாடுகளில் பந்தயங்களில் கலந்துகொண்ட அஜித்குமார் அணி அடுத்து ஸ்பெயினில் நடந்த கார் ரேஸில் கலந்துகொண்டு மூன்றாம் இடத்தையும் பிடித்தது. அடுத்து மலேசியாவில் நடக்கவுள்ள லீ மான்ஸ் பந்தயத்திலும் அவரது அணிக் கலந்துகொள்ளவுள்ளது.
இந்நிலையில் அவர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “இந்தியாவில் தற்போது கொரியப் படங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கிறது. அதே நிலை இந்திய படங்களுக்கும் வரவேண்டும். விளையாட்டும் பொழுதுபோக்கும் எப்போதும் வாழ்க்கையின் முக்கியப் பகுதிகளாக அமைந்துள்ளன. கோவிட் 19 காலத்தில் என்ன நடந்தது? மக்களைப் புத்துணர்ச்சியோடு வைத்திருந்தது இவையிரண்டும்தான். திரைப்படத் துறையில் 33 ஆண்டுகள் இருந்ததை ஒரு பாக்கியமாகக் கருதுகிறேன்.” எனக் கூறியுள்ளார்.