மாப்பிள்ளை வீட்டாரிடம் வரதட்சணை வாங்கி திருமணம் செய்ததாக தன்னைக் குறித்த அவதூறு செய்திகளை நேரடியாக எதிர்கொண்டு விளக்கம் அளித்துள்ள நடிகை ரம்யா பாண்டியன் இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:
"எனது திருமணத்தில் வரதட்சணை பெற்றதாக பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறு. நான் பொருளாதார சுதந்திரத்தைக் கடைபிடிப்பவர் பள்ளி நாட்களிலேயே வீட்டுக்கு உதவி செய்யத் தொடங்கி, கல்விக்கடனை எனது முயற்சியால் அடைத்தேன். கல்லூரி முடிந்ததும் வேலை பார்த்தேன். இன்று வரை என் செலவுகள் அனைத்தையும் என் வருமானத்தில் இருந்து தான் நடத்துகிறேன்.
"திருமண செலவுகளிலும் பாதி பங்கெடுத்தேன். என்னை வரதட்சணை வாங்கியவராக காட்டுவது வேதனையாக இருக்கிறது. என் கணவர் குடும்பம் மிகவும் ஆதரவானது. மருமகளாக அல்ல, மகளாகவே என்னைப் பார்த்தார்கள். கலாச்சாரத்தின் அடிப்படையில் எனக்கு நகைகள் சீர் கொடுத்து தங்கள் மரியாதையை செலுத்தினார்கள். அதை வரதட்சணையாகப் பார்ப்பது தவறு.
இது ஒரு குடும்ப கலாச்சாரப் பகிர்வு மட்டுமே. யாரும் வரதட்சணை வாங்கி செய்த திருமணம் என இதை சொல்ல வேண்டாம். வரதட்சணையை கொடுத்தாலும், பெற்றாலும் தவறே. நானும் எனது கணவரும் வரதட்சணைக்கு எதிராகவே இருப்போம்," என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.