சமீபத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை அடுத்து, தென்மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை ஆகிய 4 மாவட்டங்களில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரண உதவி செய்து வருகிறது.
அரசுடன் இணைந்து தன்னார்வலர்களும், சினிமாத்துறையினரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
சமீபத்தில், நடிகர் விஜய், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.
இதையடுத்து, தென்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 லாரிகளில் 20 டன் அரிசி, பால் பவுடர், போர்வைகள் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் நிவாரண பொருட்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வழியனுப்பி வைத்தார்.
இந்த நிலையில், நடிகர் விஜயுடன் இணைந்து G.O.A.T என்ற படத்தில் வரும் நடிகர் பிரசாந்த் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கினார்.
மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, மாவட்டங்களைச் சேர்ந்த 1000 பேருக்கு இன்று பிரசாந்த் நேரில் வந்து நிவாரண உதவிகள் வழங்கினார்.
90 களில் முன்னணி ஹீரோவாக இருந்த நடிகர் பிரசாந்துடன் இணைந்து பெண்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.
இதுகுறித்து பிரசாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. மழை வெள்ளத்தின்போது, மீட்பு பணி மேற்கொண்ட தமிழக அரசு மற்றும் காவல்துறை சிறப்பாக பணியாற்றியதாக பாராட்டினார்.