இந்த ஆண்டின் மெகா பிளாக்பஸ்டர் படமான டூரிஸ்ட் பேமிலிபடம் கடந்த மே 1 ஆம் தேதி ரிலீஸானது. படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்க, சிம்ரன், யோகி பாபு மற்றும் சசிகுமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.
சுமார் 12 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் திரையரங்குகள் மூலமாக மட்டும் சுமார் 75 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்தது. அதையடுத்து ஜூன் 2 ஆம் தேதி முதல் ஓடிடியில் வெளியாகி ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் தற்போது தமிழ் சினிமாவின் கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார்.
இதையடுத்து இயக்குனராகப் பாதையைத் தொடராமல் ஒரு நடிகராக தனது அடுத்த படத்தில் நடித்து முடித்துள்ளார், டூரிஸ்ட் பேமிலி படத்தின் இணை இயக்குனர் மதன் இயக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்த நிலையில் தற்போது நிறைவு பெற்றுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் டூரிஸ்ட் பேமிலி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேஷ் ராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்நிலையில் வரும் 31 ஆம் தேதி அபிஷன் ஜீவிந்த் தன்னுடையக் காதலியைக் கரம் பிடிக்கிறார். இதையொட்டி மகேஷ் ராஜ் அபிஷனுக்கு விலையுயர்ந்த BMW காரைக் கல்யாணப் பரிசாக அளித்துள்ளார்.