இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக ரஜினிகாந்த்- லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள கூலி படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர்கான், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் தற்போது ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே நேற்று இந்த படம் சென்சார் செய்யப்பட்டு A சான்றிதழ் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் இருந்து முதல்முறையாக 1000 கோடி ரூபாய் வசூலிக்கும் படமாக கூலி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
அதற்கு வட இந்தியாவில் இந்த படம் சுமார் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்யவேண்டும். ஆனால் கூலி ரிலீஸாகும் அதே நாளில் ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என் டி ஆர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள வார் 2 படம் ரிலீஸாவதால் அங்குள்ள மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் அந்த படத்தைத் திரையிடவே அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். இதையடுத்து அமீர்கான் நேரடியாக பிவிஆர் மற்றும் ஐனாக்ஸ் ஆகிய மல்டிப்ளக்ஸ் நிறுவனங்களோடு பேசி கூலி படத்துக்கு ஸ்கிரீன்கள் கொடுக்க சொல்லி கேட்டுள்ளாராம். இதனால் கூலி படத்துக்கு ஒதுக்கப்படும் திரைகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.