உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் (WCL) கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது சீசனுக்கு யுவராஜ் சிங் மீண்டும் கேப்டனாக தேர்வாகியுள்ளார். ஜூலை 18ஆம் தேதி இந்தத் தொடர் தொடங்கவுள்ளது.
இந்திய அணியின் பேட்டிங் வரிசையை ஷிகர் தவான், ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, யூசுப் பதான், குர்கீரத் மான் மற்றும் கேப்டன் யுவராஜ் சிங் ஆகியோர் வழிநடத்தவுள்ளனர். ஆல்-ரவுண்டர்களாக இர்பான் பதான் மற்றும் ஸ்டுவர்ட் பின்னி களமிறங்குகிறார்கள். பந்துவீச்சுப் பிரிவை ஹர்பஜன் சிங், வினய் குமார், சித்தார்த் கௌல், வருண் ஆரோன், அபிமன்யு மிதுன், பியூஷ் சாவ்லா, பவன் நேகி ஆகியோர் கவனித்துக் கொள்வார்கள்.
இந்தியா சாம்பியன்ஸ் அணி, தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியை ஜூலை 20 அன்று எதிர்கொள்கிறது. அதை தொடர்ந்து ஜூலை 22 அன்று தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணியுடன் மோதும். ஜூலை 26 அன்று ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணியுடனும், ஜூலை 27 அன்று இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணியுடனும், ஜூலை 29 அன்று மேற்கிந்தியத் தீவுகள் சாம்பியன்ஸ் அணியுடனும் இந்தியா சாம்பியன்ஸ் அணி விளையாடவுள்ளது.
மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். கடந்த ஆண்டு பர்மிங்காமில் நடந்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்ஸ் அணிதான் சாம்பியன் பட்டத்தை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை கோப்பையை தக்கவைக்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.