ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த பிரிவில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற வினேஷ் போகத், 100 கிராம் எடை அதிகமாக இருப்பதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் கூட கிடைக்கவில்லை.
இதனை அடுத்து நேற்று வினேஷ் போகத் இந்தியா திரும்பிய நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று வினேஷ் போகத் தனது சொந்த கிராமத்திற்கு சென்ற நிலையில் அங்கு அவரது சொந்த கிராமத்தினர் அவருக்கு தங்கப்பதக்கம் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பதக்கம் இன்றி வெறுங்கையுடன் நாடு திரும்பிய வினேஷ் போகத் தனது சொந்த கிராமத்தினர் கொடுத்த பதக்கங்களை பார்த்ததும் நெகிழ்ச்சி அடைந்தார். மேலும் அவருக்கு சொந்த கிராமத்தில் கிரீடம் அணிவித்து கையில் வாள் பரிசாக கொடுத்தனர் என்பதும், மகாபாரத காட்சிகளையும் புகைப்படங்களும் பரிசாக வழங்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது,
அதுமட்டுமின்றி சிலர் பணம் மாலையை அணிவித்த நிலையில், எனது கிராம மக்கள் அளிக்கும் ஆதரவை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் உங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன் என்றும் வினேஷ் போகத் தெரிவித்தார்.