நேற்று துபாயில் நடந்த ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால் இந்த வெற்றியை கொண்டாட முடியாத அளவில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் மைதானத்தில் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மொஹ்சின் நக்வி, பரிசளிப்பு விழாவில் இந்திய அணிக்குக் கோப்பையை வழங்க வந்தபோது, அதை வாங்க இந்திய வீரர்கள் மறுத்தனர். இதனால், கோபமடைந்த நக்வி, கோப்பையையும், பதக்கங்களையும் எடுத்துக்கொண்டு தனது ஹோட்டல் அறைக்கு சென்றுவிட்டார்.
இதையடுத்து, இந்திய அணி கையில் கோப்பை இல்லாமல் வெற்றியை கொண்டாடினர். இதனை சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்துள்ளனர். ஹர்திக் பாண்டியா, ஷுப்மன் கில், மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில், கோப்பை இல்லாத வெற்றி கொண்டாட்டத்தின் புகைப்படங்களைப் பதிவேற்றி, அதில் 'ட்ரோபி' எமோஜியை சேர்த்துள்ளனர்.
சூர்யகுமார் யாதவ் தனது பதிவில், "போட்டி முடிந்ததும், வெற்றி பெற்றவர்கள் மட்டுமே நினைவில் இருப்பார்கள், கோப்பையின் படம் அல்ல" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்து, மொஹ்சின் நக்வியின் செயலுக்கு மறைமுகமான பதிலாக பார்க்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து, வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஐ.சி.சி மாநாட்டில் கடுமையான கண்டனத்தை பதிவு செய்யப்போவதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. இந்த நிலையில், கோப்பையின்றி இந்திய அணி கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.