பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் காரணமாக இலங்கை அணி வீரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இஸ்லாமாபாத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானில் இருந்து வெளியேற இலங்கை அணி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், தொடரில் இருந்து பாதியில் வெளியேறக்கூடாது எனவும், அவ்வாறு விலகினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை அணி நிர்வாகம் தனது அணி வீரர்களை எச்சரித்துள்ளது.
மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இலங்கை அணி நிர்வாகம் இது குறித்து அவசரமாக ஆலோசனை செய்ததாகவும், இலங்கை அணி வீரர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஏற்கனவே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில், நாளை இரு அணிகளுக்கு இடையே இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.