சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய ஷர்துல் தாக்கூர், இந்த ஆண்டு லக்னோ அணியில் விளையாடி கொண்டிருக்கும் நிலையில், நேற்றைய போட்டியில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருது பெற்றார். மேலும், அவர் ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனை படைத்ததை அடுத்து, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
நேற்று நடந்த ஐதராபாத் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியில், ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட் 47 ரன்கள் அடித்தார். இந்த போட்டியில் ஷர்துல் தாக்கூர் 4 ஓவர்கள் வீசி 34 ரன்களை மட்டும் விட்டுகொடுத்து 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதனை அடுத்து, 191 என்ற இலக்கை நோக்கி லக்னோ அணி விளையாடிய நிலையில், தொடக்க ஆட்டக்காரர் மார்ஷல் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். அவரை அடுத்து, நிக்கோலஸ் பூரன் அதிரடியாக 26 பந்துகளில் 70 ரன்கள் அடித்து விளையாடிய நிலையில் லக்னோ அணி, 16.1 ஓவர்களில் 193 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது.
இதனை அடுத்து, லக்னோ அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணிக்காக விளையாடிய ஷர்துல் தாக்கூர் தற்போது லக்னோ அணியில் விளையாடி, நேற்றைய போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.