நியுசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட மறுத்தது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானில் சென்று கிரிக்கெட் விளையாட எந்த வொரு அணியும் முன்வருவதில்லை. 10 ஆண்டு காலமாக துபாயில்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் போட்டிகள் நடந்து வருகின்றன. இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் சென்ற போது அவர்களின் பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதே இதற்குக் காரணம்.
இந்நிலையில் இப்போது நிலைமை மெல்ல மெல்ல மாறி சில நாடுகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். அப்படி நியுசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி 20 போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் சென்றது. ஆனால் தொடர் தொடங்க இருந்த கடைசி நேரத்தில் நியுசிலாந்து கிரிக்கெட் வாரியம் வீரர்களின் பாதுகாப்பு காரணமாக தொடரை ரத்து செய்துவிட்டது. அதுபோல இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் தாங்கள் செல்ல மாட்டோம் என அறிவித்து விட்டன.
இது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை மனதளவில் பாதித்துள்ளது. பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் இப்போது பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி பாகிஸ்தான் மக்கள் நியுசிலாந்து கிரிக்கெட் வீரர்களை மிகவும் நேசிக்கிறார்கள். அவர்கள் அச்சுறுத்தல் இருப்பதாக நினைத்தால் அதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்திருக்க வேண்டும். கிரிக்கெட் என்பது உறவுகளை வலுப்படுத்த வேண்டும். அறிவுள்ள நாடுகள் இந்தியாவைப் பின்பற்றாதீர்கள். இந்தியாவில் சூழல் சரியில்லாத போதும் எங்களுடைய வாரியம் சொன்னதால் நாங்கள் சென்று விளையாடினோம். பொய்யான மின்னஞ்சல்களைக் கண்டு அஞ்சி தொடரை ரத்து செய்தால் அது அவர்களை வெற்றி பெறச் செய்வதற்குச் சமம். இது சரியான வழியல்ல எனக் கூறியுள்ளார்.