ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில், 17 வயதான கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின் வலைப்பயிற்சியின் போது பந்து தாக்கியதில் உயிரிழந்தார்.
 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	கடந்த 2 நாட்களுக்கு முன் டி20 போட்டி தொடங்குவதற்கு முன், அவர் ஹெல்மெட் அணிந்து தானியங்கி பந்துவீச்சு இயந்திரத்தை எதிர்கொண்டபோது, பந்து எதிர்பாராத விதமாக அவரது தலை மற்றும் கழுத்து பகுதியில் பலமாக தாக்கியது. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி காலமானார்.
	 
	பென் ஆஸ்டினின் மறைவால், அவரது ஃபெர்ன்ட்ரீ கலி கிரிக்கெட் கிளப் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியுள்ளது. அவரை ஒரு "சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த தலைவர் மற்றும் அற்புதமான இளைஞர்" என்று கிளப் புகழாரம் சூட்டியுள்ளது.
	 
	கிரிக்கெட்டில் பந்து தாக்கி மரணங்கள் ஏற்படுவது அரிதானது என்றாலும், 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் வீரர் பிலிப் ஹியூஸ் பந்து கழுத்தில் தாக்கி இறந்த சம்பவம் உலக கிரிக்கெட்டை உலுக்கியது. அதை தொடர்ந்து, வீரர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், பாதுகாப்பு விதிமுறைகளை வலுப்படுத்தவும் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.