இன்று நடைபெறும் உலக கோப்பையில் தினேஷ் கார்த்திக் விளையாட இருக்கிறார். இது ரசிகர்களை கொண்டாட்டத்தில் தள்ளியிருக்கிறது. தினேஷ் கார்த்திக்கின் வரவை ரசிகர்கள் இவ்வளவு எதிர்பார்க்க சில காரணங்களும் இருக்கின்றன.
போன வருடம் உலக கோப்பை டி-20 போட்டிகள் நடைபெற்றது. அதன் இறுதி ஆட்டத்தில் இதே வங்க தேசத்துடன் அன்று இந்தியா மோதியது. முதலில் பேட்டிங் செய்த வங்க தேசம் 20 ஓவரில் 166 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து விளையாடிய இந்திய அணி வங்க தேசத்தின் சுழல்பந்துகளில் சிக்கி தவித்தது. 20 ஓவர் முடிய கடைசி ஒரு பந்துதான் இருந்தது. இந்தியா 162 ரன்கள் பெற்றிருந்தது. பவுண்டரி அடித்தாலும் மேட்ச் சரிசமமாக முடிந்துவிடும். அந்த கடைசி பந்தை அடித்து விளாசி சிக்ஸ் அடித்தார் தினேஷ் கார்த்திக். அந்த ஒரு சிக்ஸரில் டி20 உலக கோப்பை இந்தியாவுக்கு கிடைத்தது.
அதுமட்டுமல்லாமல் தினேஷ் கார்த்திக் முதன்முறையாக களத்தில் இறங்கும் ஒருநாள் உலக கோப்பை இதுதான். இதற்கு முன்னர் 2007 உலக கோப்பையின்போது தினேஷ் கார்த்திக் அணியில் இருந்தாலும் களத்தில் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கு பிறகான 2011 மற்றும் 2015 உலக கோப்பைகளில் அவர் அணியில் இல்லை. ஒரு சிறந்த வீரனை கண்டுக்கொள்ள கொஞ்சம் காலம் ஆகலாம். அந்த காலம் இப்போது வாய்த்திருக்கிறது.
12 வருடங்கள் கழித்து மீண்டும் உலக கோப்பைக்காக களத்தில் இறங்கியிருக்கிறார் இந்த தமிழ்நாட்டு வீரர். இந்தியா முழுவதும் பலர் தினேஷ் கார்த்திக்கின் இன்றைய விளையாட்டை ஆர்வமுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். சமூக வலைதளங்களில் தினேஷ் கார்த்திக் ஹேஷ்டேகுகள் வேகமாக பரவி வருகின்றன. இன்றைக்கு மேட்ச்சின் திருப்புமுனையாக தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் இருக்கும். இன்று எட்பாஸ்டன் மைதானத்தை ஆளப்போவது இந்த தமிழன்தான்!