இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையே அகமதாபாத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றதை அடுத்து, அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
அக்டோபர் இரண்டாம் தேதி தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை தொடர்ந்து, இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 448 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.
இதனை தொடர்ந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி, வெறும் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் மிக அபாரமாக பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா, இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, முதல் இன்னிங்ஸில் சதமும் அடித்ததால், அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
முதல் டெஸ்ட் போட்டி 3 நாட்கள்கூட முழுமையாக நடைபெறாத நிலையில் முடிவடைந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், இந்திய அணியின் இந்த அபாரமான வெற்றி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.