இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தனது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக தொடர்ந்து 2 போட்டிகளில் 'டக் அவுட்' ஆகி ஆட்டமிழந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், கோலி 4 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். 8 மாத இடைவெளிக்கு பிறகு அவர் விளையாடிய முந்தைய பெர்த் போட்டியிலும் அவர் ரன் எதுவும் எடுக்கவில்லை.
'கோலியின் கோட்டை' என்று அழைக்கப்படும் அடிலெய்ட் மைதானத்திலும் அவர் ஏமாற்றியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியபோது ரசிகர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். அதற்கு அவர் தனது கையை அசைத்து சென்ற செயல், சமூக ஊடகங்களில் பேசுபொருளானது.
ஏற்கெனவே டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற கோலி, ஒருநாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வு முடிவை அறிவிக்கப் போகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. #KohliRetirement என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.