பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீராங்கனை ஜஹானாரா ஆலம், முன்னாள் தேர்வாளர் மன்ஜூருல் இஸ்லாம் மீது பாலியல் தொல்லை புகார்களை பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
2022 உலகக் கோப்பையின்போது தனக்கு அநாகரிகமான அழைப்புகள் வந்ததாகவும், அவற்றை ஏற்க மறுத்ததால், தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு மன்ஜூருல் தடுப்பாக இருந்ததாகவும் ஜஹானாரா குற்றம் சாட்டியுள்ளார்.
தன் மீதான தொந்தரவுகள் குறித்து பலமுறை புகார் அளித்தும், பெண்கள் குழு தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி உட்பட பல பிசிபி அதிகாரிகள் புறக்கணித்ததாக அவர் தெரிவித்தார். மன்ஜூருல் வீராங்கனைகளுடன் நெருங்கி பழகுவது, மாதவிடாய் தேதி குறித்து அநாகரிகமாக கேட்பது போன்ற சம்பவங்களையும் ஜஹானாரா விவரித்தார்.
எனினும், மன்ஜூருல் இந்த குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை என்று மறுத்துள்ளார். இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது என்று கூறியுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தேவைப்பட்டால் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.