கிரிக்கெட் உலகின் அதிரடி ஆட்டக்காரரான ஆப்கானிஸ்தான் வீரர் உஸ்மான் கனி, இங்கிலாந்தில் நடைபெற்ற டி10 போட்டியில் ஒரு உலக சாதனை படைத்துள்ளார். ஒரே ஓவரில் 45 ரன்கள் குவித்து, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
இங்கிலாந்தில் நடந்து வரும் இசிஎஸ் டி10 தொடரில், லண்டன் கவுன்டி கிரிக்கெட் அணிக்கும், கில்ட்ஃபோர்டு அணிக்கும் இடையேயான போட்டியில் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த லண்டன் கவுன்டி அணியின் கேப்டனான உஸ்மான் கனி, வெறும் 43 பந்துகளில் 153 ரன்கள் குவித்தார். இதில் 11 பவுண்டரிகள் மற்றும் 17 சிக்ஸர்கள் அடங்கும்.
கில்ட்ஃபோர்டு அணியின் பந்துவீச்சாளர் வில் எர்னி வீசிய ஒரு ஓவரில், உஸ்மான் கனி 45 ரன்கள் விளாசினார். அந்த ஓவரில், 6 ரன்கள், ஒரு நோ-பால், 6 ரன்கள், ஒரு வைடு, 4 ரன்கள், ஒரு நோ-பால், 6 ரன்கள், 0 ரன்கள், 6 ரன்கள், 4 ரன்கள் என அவர் எடுத்த ரன்கள், பந்துவீச்சாளருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
லண்டன் கவுன்டி அணி, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 226 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து விளையாடிய கில்ட்ஃபோர்டு அணி, 155 ரன்கள் மட்டுமே எடுத்து 71 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.