நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் 14 வயது சூர்யவன்ஷி ராஜஸ்தான் அணியில் களம் இறக்கப்பட்ட நிலையில், அவர் அபாரமாக ஆடியதை அடுத்து லக்னோ அணியின் உரிமையாளர் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 180 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 181 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி, 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் மட்டுமே எடுத்ததால், இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபாரமாக வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் 14 வயது சூர்யவன்ஷி ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார். அவர் 20 பந்துகளில் 34 ரன்கள் அடித்தார். இதில் மூன்று சிக்ஸர்களும், இரண்டு பவுண்டரிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான ஜெயஸ்வால் 74 ரன்கள் அடித்தார். இதனை அடுத்து, சூர்யவன்ஷிக்கு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா நேரில் பாராட்டு தெரிவித்தார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேற்றைய போட்டியின் கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால், முதல் பந்தில் ஒரு ரன், இரண்டாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்த ராஜஸ்தான், மூன்றாவது பந்தில் ஒரு விக்கெட்டை இழந்தது. நான்காவது பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தனர். கடைசி பந்தில் ஒரே ஒரு ரன் மட்டுமே எடுத்ததால், லக்னோ அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.