Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐயப்பனின் அறுபடை வீடுகள் என்ன தெரியுமா.....?

Advertiesment
ஐயப்பனின் அறுபடை வீடுகள் என்ன தெரியுமா.....?
ஆறுமுகக் கடவுளான முருகனுக்கு எப்படி அறுபடைவீடுகள் புகழ்வாய்ந்தவையாக இருக்கின்றனவோ, அது போலவே ஐயப்பனுக்கும் ஆறு கோவில்கள் முக்கியமானவை ஆகும். இவை ஐயப்பனின் அறுபடை வீடுகளாக குறிப்பிடப்படுகின்றன. 

ஐயப்பனின் அறுபடை வீடுகளாக  ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழா, எருமேலி, பந்தளம் மற்றும் சபரிமலை என ஆறு கோவில்கள் முக்கியமானவையாகும்.
 
ஆரியங்காவு : சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் முதலில் தரிசிக்க வேண்டிய கோவில் இதுவாகும். மற்ற ஐயப்பன் கோவில்களில் ஐயப்பன் பிரம்மச்சாரியாகவே காட்சியளிப்பதுண்டு. ஆனால், ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் ஐயப்பன் சவுராஷ்ட்ர குலதேவியான புஷ்கலா தேவியுடன் அரச கோலத்தில் காட்சியளிக்கின்றார்.
 
அச்சன்கோவில் : இக்கோவிலில் உள்ள ஐயப்பன் விக்ரகம் மிகப்பழமையான விக்ரகமாகும். ஐயப்பன் போருக்கு பயன்படுத்திய வாள் இங்கு  பத்திரமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு மற்றொரு விஷேச சக்தியுண்டு. அதாவது விஷப்பூச்சிகள் தீண்டினால், ஐயப்பன் விக்ரகத்தின் மீது பூசப்பட்டுள்ள சந்தனத்தையும் மந்திரித்த தீர்த்தத்தையும் தருவார். அவை தான் விஷக்கடிக்கு மருந்தாகும். உடலில் இருந்து  விஷம் முற்றிலும் இறங்கி உடல் பூரணமாக குணமடைந்துவிடுகிறது.
 
குளத்துப்புழா : ஒரு மனிதனின் வாழ்க்கையை ஐந்து பருவங்களாக பிரித்து சாஸ்திரங்கள் வகைப்படுத்தியுள்ளன.இதில் பால்ய பருவத்தை  விவரிக்கும் வகையிலேயே குளத்துப்புழா பாலகன் கோவில் அமைந்துள்ளது.
 
எருமேலி : சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் அனைத்து ஐயப்ப பக்தர்களுக்கும் தவிர்க்கவே முடியாக ஒரு இடம் எதுவென்றால் அது எருமேலி தான். ஐயப்ப பக்தர்கள் அனைவரும் இங்கு வந்து வேடர்களைப் போல் வேஷமிட்டு பேட்டை துள்ளும் இடமாக உள்ளது. இங்கு  தான் ஐயப்பன் வேட்டைக்கு செல்லும் கோலத்தில் கையில் வில் மற்றும் அம்புகளை தாங்கியவாறு காட்சியளிக்கிறார்.
 
பந்தளம் : காட்டில் பாலகனாக கண்டெடுக்கப்பட்ட ஐயப்பன் மன்னரான ராஜசேகரனால் 12 வயது வரையிலும பந்தளம் அரண்மனையில் தான் வளர்க்கப்பட்டார். பந்தளம் அரண்மனை, சபரிமலையில் இருந்து சுமார் 88 கி.மீ தொலைவிலும், திருவனந்தபுரத்தையும் கோட்டயத்தையும்  இணைக்கும் பாதையில் அமைந்துள்ளது.
 
தர்மசாஸ்தாவாக விளங்கும் ஐயப்பன் துறவறம் மேற்கொள்ள, வில்லெடுத்து அம்பெய்தினார். அந்த அம்பு வந்து விழுந்த இடமே  சபரிமலையாகும். அந்த இடத்தில் தான் 18 படிகளுடன் கோவில் உருவாக்கப்பட்டு, கிழக்கு நோக்கி ஐயப்பன் விக்ரகம் பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ளது. அருகிலேயே மாளிகைப்புரத்து அம்மனுக்கும் தனிக் கோவிலும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தான் ஆண்டுதோறும் மகர ஜோதி தினத்தன்று ஐயப்பன் ஜோதி வடிவாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
 
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க மாலையணிந்து விரதம் இருந்து வரும் அனைத்து ஐயப்ப பக்தர்களும் தர்ம சாஸ்தாவான ஐயப்பன் குடிகொண்டு அருள்பாலிக்கும் மேற்கண்ட 6 கோவில்களுக்கும் சென்று வழிபட்டால் தான் புனித யாத்திரை சென்றதன் முழு பயனும்  கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (30-11-2019)!